உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையால் (WTBF) நடாத்தப்படும் 6 வது உலகக்கிண்ணப் போட்டி

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 6 வது உலகக்கிண்ணப் போட்டி கடந்த சனி ஞாயிறு தினங்களான பங்குனி 31 ந் திகதியும், சித்திரை 1 ந் திகதியும் டென்மார்க் நாட்டில் உள்ள அழகிய
நியூபோ நகரில் உலகப்பூப்பந்தாட்டப் பேரவையின் ஸ்தாபகரும் தலைவருமாகிய திரு சிங்கம் கந்தையா தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இப்பிரமாண்ட உலக க்கிண்ணப்போட்டிக்கு பிரதம அதிதிகளாக ஆரம்ப நிகழ்விற்கு Keld Arentoft ம்
பரிசளிப்பு நிகழ்விற்கு நியூபோ நகரபிதா Kenneth Muhs ம் மற்றும் சிறப்பு அதிதிகளாக நியூபோ தமிழர் விளையாட்டுக்கழக முன்னாள் உறுப்பினர்களும் மற்றும் உலகப்பூப்பந்தாட்டப் பேரவையின் முக்கிய உறுப்பினர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

15 நாடுகளில் இருந்து வருகை தந்த 270 போட்டியாளர்கள் மற்றும் அரங்கம் நிறைந்த பலநூறு
பார்வையாளர்களுடன் போட்டிகள் இருநாட்களாக மூன்று விளையாட்டு அரங்குகளில் 18 திடல்களில் நன்றே நிகழ்ந்தது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சுற்றுக்கள் இனிதே நிறைவேறிய பின்
போட்டியாளர்களுக்கான பரிசளிப்புகள் நியுபோ நகரபிதா Kenneth Muhs அவர்கள் முன்னிலையில்
வழங்கப்பட்டது. அதி கூடுதலான வெற்றிக்கிண்ணங்களை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பெற்று
இவ்வுலகக் கிண்ணப் போட்டியின் வெற்றியாளர்களாகத்்திகழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் ஒருபெருங்கொண்டாட்டமாக பல கலைநிகழ்வுகளுடன் இனிதே நிறைவுற்றது.

இப்போட்டி பேரவையின் ஸ்தாபகரும் தலைவருமாகிய திரு சிங்கம் கந்தையாவும்
செயலாளர் சிவசிறீ பாலா அவர்களும் மற்றும் ஆலோசகரும் தொழில்நுட்ப
பொறுப்பாளருமாகிய றோமன் அவர்களின் அயராத உழைப்போடு உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் டென்மார்க் கிளையினர், நியூபோ விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் நியூபோ வாழ்மக்களின் பாரிய ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவேறியது. பல முக்கிய உறுப்பினர்கள் நிகழ்வில் உரையாற்றினர். உலகப் பூப்பந்தாட்டப் பேரவையின் செயலாளர் சிவசிறீ பாலா அவர்கள் ஒரு காத்திரமான உரையை நிகழ்த்தினார். அவர் உரையில் உலகப்பூப்பந்தாட்டப்பேரவையின் வளர்ச்சி பற்றியும் எதிர்காலத் திட்டம் பற்றியும் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார். திரு சிங்கம் கந்தையா அவர்கள் உரையாற்றுகையில் பல வருடங்களாக திட்டமிட்டு இனிதே நடந்தேறிய திருமணம் போன்று உணர்கிறேன் என்றுரைத்ததோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறி தனது தலைவர் பதவியை திரு சிவசிறீ பாலா அவர்களிடம் கையளித்திருந்தார்.

இவ்வுலகப் போட்டியானது டென்மார்க்கில் ஒரு சிறிய நகரமாகிய நியூபோ நகரில் நிகழ்ந்த போதும் அந்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் ஒற்றுமையாலும் நியூபோ தமிழர் விளையாட்டுக் கழகத்தினரின் ஒத்துழைப்புடனும் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின்
டென்மார்க் கிளையினரின் அயராத உழைப்பினாலும் இனிதே நிறைவேறியது. இப்போட்டி
பூமிப்பந்தெங்கும் பரந்து வாழும் பூப்பந்தாட்டப் பிரியர்களை ஒன்றிணைத்து ஐக்கியபடுத்துவதோடு விளையாடும் திறனையும் ஆர்வத்தையும் ஊட்டுமென்பதில் ஐயமில்லை. பெருவிருட்சமாக நிழல் பரப்பும் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையானது மேலும் வளர்ந்து உலகப்பூப்பந்தாட்டச் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெறுமளவுக்கு உயருமென நம்பப்படுகிறது. வருகின்ற ஆண்டில் ஏழாவது உலக க்கிண்ணப்போட்டியானது நோர்வே நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தித்தொகுப்பு
நக்கீரன் மகள்
டென்மார்க்

விளையாட்டு ரீதியாக  உலகத்தமிழர்களை ஒன்றிணைத்து உலகப் பூப்பந்தாட்டப் பேரவையால்  நடாத்தப்படும் உலக கிண்ணப் போட்டியானது  இம்முறை ஆறாவது தடவையாக  டென்மார்க்கில் நியூபோ நகரில் ஆரம்பமாகியுள்ளது.  உலகப் பூப்பந்தாட்டப்பேரவையின் ஸ்தாபகரும் பேரவையின் தலைவருமாகிய  திரு கந்தையா சிங்கம் அவர்கள் தலைமையில் 6வது உலகக் கிண்ணப்போட்டிக்குழுவின் ஏற்பாட்டுடனும்  நியுபோ தமிழர் விளையாட்டுக்கழகத்தின் ஒத்துழைப்புடனும்  இந்நிகழ்வு சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கிறது           

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நியுபோ நகர  விளையாட்டு மைதானப்பொறுப்பாளர் Keld Arentoft வருகைதந்து  சிறப்பித்ததோடு மற்றும் சிறப்பு அதிதிகளாக உலகப்பூப்பந்தாட்டப் பேரவையின் ஆலோசகரும் தொழில்நுட்ப பொறுப்பாளருமாகியதிரு  Roman pechous அவர்களும்  மற்றும் நியூபோ தமிழர் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் உறுப்பினர்களும், உலகப் பூப்பந்தாட்டப் பேரவையின் முக்கியபிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர் அதன்பின்னர் மங்கலவிளக்கேற்றல், அமைதிவணக்கம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து  பிரபல இலக்கியவாதி திரு அகளங்கன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பேரவையின் முக்கிய உறுப்பினர்களும்பிரதம அதிதியும்  உரையாற்றினர் அத்துடன்  பேரவைவின் ஸ்தாபகர்சிங்கம் கந்தையா,  செயலாளர் சிவசிறீ பாலா மற்றும் ஆலோசகர் Roman  pechous போன்றோருக்கு நியூபோ வாழ் சிறுவர்களால் மலர்கொத்து வழங்கப்பட்டு  மதிப்பளிக்கப்பட்டதோடு உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்  பேரவையின் ஆறாவது உலகக் கிண்ணச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டு பிரதிகளும் பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை, கனடா  அவுஸ்திரேலியா உட்பட 15 நாடுகள்
பங்குபற்றும் இந்நிகழ்வில் 270 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இத்தனை போட்டியாளரைக் கொண்ட இவ் விளையாட்டில் 25 பிரிவுகள் கொண்டதோடு,  பிரிவுகள் 11 வயதுக்குட்பட்டோரிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோரும் பங்குபற்றும் வகையில்  அமைந்துள்ளது.  மூன்று
மைதானங்களில் 18 திடல்களில் நடைபெறும் போட்டிகளின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை ( 01/ 04 – 2018) நிறைவுற்று பரிசில்கள் வழங்கப்படும்

முதன் முதலில் (2013)சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி பின்னர் முறையே
பிரான்சு( 2014 ), இங்கிலாந்து ( 2015 ) யேர்மனி(2016 ), கனடா (2017 )என நடாத்தப்பட்டு  இம்முறை டென்மார்க்கில் நியுபோ நகரில்  Nyborg hallen விளையாட்டு அரங்கத்தில்  அரங்கம் நிறைந்த
பார்வையாளர்களோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்நிகழ்வு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

உலகமே வியக்கும் வகையில் ஆறாவது வருடமாக  நடைபெறும் இப் பிரமாண்டமான உலக க்கிண்ணப்போட்டியானது உலகில் உள்ள பல தமிழர்களை ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்துவதோடு குறிப்பாக இளையோர் மத்தியில் ஒற்றுமையையும்
விளையாடும் உணர்வையும் ஊட்டிஅவரகளின் திறனையும் வளர்க்குமென நம்பப்படுகிறது. இவ்வுலக க்கிண்ணப்போட்டி அடுத்த ஆண்டு நோர்வே நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தித்தொகுப்பு
நக்கீரன் மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *